ராமேஸ்வரத்தில் இன்று சிபிஐ கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்வில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு உரிய அழுத்தங்களைக் கொடுத்து, அவர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜஸ்தான் மாநில அரசின் சுகாதாரத் துறை பட்டாசு வெடிப்பதைத் தடை செய்வதாக அறிவித்துள்ளது. பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்பட்டு, கரோனா நோயாளிகளுக்குக் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.
பட்டாசு விற்பனையில் இந்தியா முழுவதும் 95% பட்டாசுகள் விருதுநகர் மாவட்டத்தை அடுத்த சிவகாசி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உற்பத்தியாகிறது.
இந்தத் தொழிலில் 6 லட்சம் தொழிலாளர்கள் வரை வாழ்வாதாரம் பெற்றுள்ளனர். உச்ச நீதிமன்றமும் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபடவில்லை என்று தெரிவித்துள்ள நிலையிலும், ராஜஸ்தான் அரசின் தடையுத்தரவு சிவகாசியில் உள்ள 6 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயலாக அமைந்துள்ளது. இதனால் ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ள பட்டாசு வெடிப்புக்கான தடையை ரத்துசெய்ய வேண்டும்.
ராமநாதசுவாமி கோயிலின் தங்க நகைகள் எடை குறைந்துள்ளது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள், குருக்களிடம் அரசு விசாரணை செய்ய வேண்டும்.
நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் தமிழ்நாடு மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பேன் என்று தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அவர் கொடுத்த வாக்கினை நிறைவேற்றவில்லை. தமிழ்நாடு மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பினை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும்" எனக் கூறினார்.