திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இதுவரை கரோனா தொற்றினால் 210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களில் 50 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இதன் ஒரு பகுதியாக வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, இன்று(ஏப்.29) சுப்ரமணி நகர் முழுவதும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஏற்கனவே 3,000 சதுர அடி உள்ள சூப்பர் மார்கெட்களை திறக்க தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.
இந்தநிலையில் காதர் பேட்டை பகுதியில் அரசின் விதிமுறைகளை மீறி இயங்கி வந்த சூப்பர் மார்க்கெட், பேருந்து நிலையம், நியூ டவுண் பகுதிகளில், கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாத இரண்டு தேநீர் கடைகள் என, மொத்தம் ஆறு கடைகளுக்கு சீல் வைத்து அதிரடியாக நடவடிக்கை எடுத்தார்.
இனி விதி முறைகளை மீறி செயல்படும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதோடு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.