சேலம் உருக்காலை பணிமனையில் வெப்ப உருக்காலையின் தொழில்நுட்பப் பிரிவில் மூத்த பணியாளராக பணியாற்றி வந்த கண்ணன் என்பவருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்த நிலையில் கண்ணன் சிகிச்சைப் பலனின்றி நேற்று (செப்டம்பர் 19) மதியம் 3 மணி அளவில் உயிரிழந்தார்.
இதனையடுத்து உயிரிழந்த கண்ணன் குடும்பத்தில் ஒருவருக்கு சேலம் இரும்பாலையில் பணி வழங்க வலியுறுத்தி உருக்காலை தொழிற்சங்கத்தினர் ஆலையின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
ஆர்ப்பாட்டம் குறித்து அவர்கள் கூறுகையில், "தொழிலாளர்களுடன் இரும்பாலை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி உயிரிழந்த கண்ணன் குடும்பத்தில் ஒருவருக்கு இரும்பாலையில் வேலை வழங்க வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்." என்று தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை அடுத்து இரும்பு ஆலை நிர்வாகம் சார்பில் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்தால் இரும்பாலை பகுதியில் பரபரப்பு நிலவியது.