கடந்த சில நாள்களாக கோவை முழுவதும் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்நிலையில் நேற்று 9.30 மணியளவில் செட்டி வீதி கே.சி. தோட்டம் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு இரவு பெய்த மழையினால் திடீரென்று இடிந்து விழுந்தது.
கண்ணன் என்பவருக்குச் சொந்தமான அந்த அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் கட்டட இடிபாடுகளில் எட்டுக்கும் மேற்பட்டோர் சிக்கியதாகத் தெரிகிறது.
உடனடியாக, இது குறித்து தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புப் படை வீரர்கள் வெகுநேரம் போராடி இடிபாடுகளில் இருந்து 3 பேரை சடலமாகவும், 5 பேரை காயங்களுடனும் மீட்டுள்ளனர்.
இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட ஐந்து பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இரண்டாவது நாளாக தொடர்ந்து இன்றும் மீட்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இன்று கஸ்தூரியம்மாள் என்ற மூதாட்டி இடிபாடுகளில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மேலும் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒரு லட்சம் நிவாரண உதவி வழங்கப்படுமென அறிவித்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.