உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் மார்ச் மாதம் 25ஆம் தேதியன்று ஊரடங்கை அமல்படுத்தியது.
கரோனா பாதிப்பு ஒருபுறம் இருந்தாலும், மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் காக்கும் கடந்த 5 மாதங்களில் நான்கு கட்டங்களாக ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வந்தன.
இருப்பினும், போக்குவரத்து சேவை தமிழ்நாட்டில் தொடங்கப்பெறாத நிலையே நீடித்து வந்தது.
மக்களின் பிரதான கோரிக்கையாக இருந்துவந்த போக்குவரத்து இயக்கம் குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து சேவை இன்று தொடங்குவதாக அறிவித்தது.
இதனையடுத்து, அரசின் கடும் கட்டுப்பாடுகளுடன் இன்று சென்னையில் மெட்ரோ ரயில், பயணிகள் ரயில், பேருந்து சேவைகள் இயங்கத் தொடங்கின.
வெறிச்சோடிய கோயம்பேடு
சென்னை மிக முக்கிய அடையாளமாகத் திகழும் கோயம்பேடு பேருந்து நிலையம் செல்லும் அனைத்து பயணிகளும் உடல் வெப்ப நிலை பரிசோனை செய்யப்பட்டு, கிருமி நாசினி வழங்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பேருந்து சேவை தொடங்கினாலும், பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கரோனா அச்சம் காரணமாக மிகக் குறைந்த அளவு மக்களே பேருந்து சேவையை பயன்படுத்தினர்.
பல பேருந்துகள் 20க்கும் குறைவான நபர்களுடனே இயக்கப்பட்டது. இதனால் கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
அருகாமை மாவட்டங்களுக்கு ...
இருப்பினும் காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட அருகாமை மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் மட்டும் அதிகளவில் இயக்கப்பட்டன. தனி மனித இடைவெளியை பயணிகள் செய்தது கரோனா பீதியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
வடக்கு, தென் மாவட்டங்களுக்கு...
மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு ஓரிரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. அதேபோல் வட மாவட்டங்களுக்கும் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகிறது.
இருப்பினும், அடுத்து வரும் நாள்களில் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநில விரைவு போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
பயணிகள் வரவு இல்லாததால் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் ஏதும் திறக்கப்படவில்லை.
காலி இருக்கைகளுடன் புறப்பட்ட ரயில்...
கரோனா காரணமாக ரயில் நிலையத்தில் வழக்கத்தைவிட அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள பல்வேறு நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டு, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட நுழைவு வாயில் வழியாக மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நிற்க வைத்து தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, டிக்கெட்டுகள் பரிசோதிக்கப்பட்டு ரயில் நிலையத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
தனிமனித இடைவெளியை கண்டுபிடிப்பதற்காக கூடுதலான ரயில்வே பணியாளர்களும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கோவை, காரைக்குடி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
பயணிகளுடன் நெருக்கமாக பணியாற்றும் ரயில்வே துறை பணியாளர்கள், டிக்கெட் பரிசோதகர்கள் உள்ளிட்டவர்களுக்கு முக கவசத்துடன் பிளாஸ்டிக்காலான முகத் திரையையும், கையுறைகளும் வழங்கப்பட்டுள்ளன.
50 % முதல் 60 % வரையிலான பயணிகளுடனேயே பெரும்பாலான ரயில்கள் இயக்கப்பட்டது.
தனி மனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரு பெட்டியில் உள்ள கேபினில் 3 முதல் 4 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக அலுவலர்கள் கூறினர். இருப்பினும் பல பெட்டிகள் காலியாகவே சென்றன.
அடுத்து வரும் நாள்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்ரோ ரயில் சேவை...
சென்னை விமான நிலையத்திலிருந்து, வண்ணாப்பேட்டையை இணைக்கும் சென்னை மெட்ரோவின் நீல நிற வழித்தடத்தில் இன்று சேவையை தொடங்கியது. பரங்கிமலையிலிருந்து எம்.ஜி.ஆர்.சென்ட்ரல் ரயில் நிலையத்தை இணைக்கும் பச்சை வழித்தட சேவை வரும் 9 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மற்ற அனைத்து போக்குவரத்து முறைகளைக் காட்டிலும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சிறப்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்யப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கார்டு, டிராவல் கார்டு, க்யூர் கோடு என தொடர்பில்லாத முறையில் பயணச்சீட்டு, குளிர் சாதன வசதி மூலம் கரோனா தொற்று பராவாமல் இருக்க முன்னெச்சரிக்கை, ஊழியர்களுக்கு கையுறை, முகத்திரை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறைந்த அளவு மக்கள் பயணித்தாலும் கூட்டம் அதிகம் கூடும் பீக் ஹவரில் 5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயிலும் மற்ற நேரங்களில் 10 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயிலும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனி மனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 1200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் செல்லும் திறன் கொண்ட ரயிலில் 200 பயணிகளுடனே இயக்கப்படும் என மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து சேவை முடக்கப்பட்டதால் இறப்பு, உடல் நலக் குறைவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்குகூட பயணம் செய்ய முடியாத நிலை இருந்தது. வசதி படைத்தவர்கள் தனியார் வாகனங்கள் மூலம் பயணம் செய்தாலும் ஏழை எளிய மக்கள் பயணம் செய்ய முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்த நிலையில் மீண்டும் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டிருப்பதை மக்கள் பெரிதும் வரவேற்கின்றனர். போக்குவரத்து சேவை 5 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது எனலாம்.
சூழலை உணர்ந்து முக்கிய காரணங்களுக்கு மட்டுமே பயணம் மேற்கொள்கின்றனர். இருப்பினும் சென்னையின் முக்கிய போக்குவரத்து வசதியான புறநகர் ரயில் சேவைகள் இதுவரை இயக்கப்படாததால் சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்பவர்கள் சென்னைக்கு வேலைக்காக வந்து செல்ல முடியாத சூழல் உள்ளது. இதனால் தொழிற்சாலைகளில் ஆட்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தொழிற்சாலை வட்டாரங்கள் கூறுகின்றனர்.