ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலாம்பாளையம் கிராமத்தில் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது.அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து இந்த கூட்டுறவு சங்கத்தில்தான்பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில் கொள்முதல் செய்யப்பட்ட பாலின் தரம் குறைவாக இருப்பதாக கூறி ஆவின் நிர்வாகம் மூன்று கேன் பாலை திருப்பி அனுப்பியுள்ளது. இந்த பாலுக்கு பணம் தர முடியாது என்றும் ஆவின் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை பால் ஊற்றுவதற்காக அங்கு சென்று விவசாயிகள் இது குறித்து விசாரித்தனர்.
அப்போது, வழக்கமாக பாலின் கொழுப்புச் சத்து அளவு 27 முதல் 28 டிகிரி வரை இருந்தால் கொள்முதல் செய்யப்படும் எனவும் தற்போது திருப்பி அனுப்பப்பட்ட பாலின் கொழுப்புச் சத்து அளவு 25 டிகிரி மட்டுமே இருந்ததாகவும் ஆவின் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு விவசாயிகள், பாலின் தரம் குறைவாக இருப்பதால் சத்து அளவு குறித்து முன்கூட்டியே எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாற்றாக பாலை திருப்பி அனுப்பி விட்டு பணம் தர முடியாது எனக் கூறினால் நாங்கள் என்ன செய்வோம் எனக் கூறி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் ஆவின் அலுவலக மேற்பார்வையாளர்கள் சண்முகம், சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். திருப்பி அனுப்பப்பட்ட பாலுக்கு பணம் வழங்கப்படும் என ஆவின் அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.