தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி பெண்கள் திருமண உதவி தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களது விண்ணப்ப மனுக்கள் மீது எந்தவொலு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.
இதனிடையே, கிடப்பில் போடப்பட்டுள்ள அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா மாவட்ட ஆட்சியர் சமீரனை இன்று நேரில் சந்தித்து மனு ஒன்றினை அளித்தார்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசி அவர், "தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கீழப்பாவூர், ஆலங்குளம், கடையம், பாப்பாகுடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி பெண்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி கல்வி முடித்த பெண்கள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இருப்பினும், அவர்களுக்கு இதுநாள் வரை அந்த உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதேபோன்று அன்னை சிவகாமி அம்மையார் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித் தொகையும் வழங்கப்படவில்லை.
கடந்த மூன்று ஆண்டுகளாக, உதவித் தொகை கோரிய விண்ணப்பதாரர்களின் மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ஆலங்குளம் தொகுதியில் குடிநீர் திட்டம், செங்கனூர் ஆளில்லா ரயில்வே பாதையில் பொது மக்களுக்கு பயன்படாமல் இருக்கும் சுரங்கப் பாதையை மாற்றி அமைத்து மாற்றுப் பாதையை ஏற்படுத்தி தர வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளேன்" என தெரிவித்தார்.