மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகம் இயங்கி வந்த இடத்திற்கு மதிமுக பிரமுகர் உரிமை கோரியதால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு காவல் நிலையத்தில் கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பாமக, மதிமுக இரு தரப்பினர் முன்னிலையில் அலுவலகத்திற்ககு காவல்துறையினர் பூட்டு போட்டனர். இந்நிலையில் தற்போது திடீரென பாமகவினர் அலுவலகத்தை திறந்து உள்ளே புகுந்தனர்.
இதனை அறிந்த சீர்காழி காவல்துறையினர் அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கு சென்றனர். அங்கே உள்ளே அமர்ந்திருந்த பாமகவினரிடம் ஏற்கனவே கட்சி அலுவலகம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், தீர்ப்பு வரும் வரை யாரும் இடத்தை பயன்படுத்தக்கூடாது என கூறி அலுவலகத்தை மூடக்கோரி அனைவரையும் வெளியேற கூறினார்.
அப்போது பாமகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பாமகவினர் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர். பின்னர், மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.