தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி கட்டணம் வசூலிக்கப்படும் முறை தொடர்பாக தனியார் பள்ளிகள் ஆசிரியர் கூட்டமைப்பின் நிறுவனர் கார்த்திக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில், "கல்வி கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி பல தனியார் பள்ளி கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்து வருகின்றன. அதேபோல் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை.
தனியார் பள்ளி கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஊதியமாக காட்டப்படும் கணக்கு அதிகமாகவும், உண்மையில் கொடுக்கப்படும் ஊதியம் மிக குறைவாகவும் உள்ளது.
வருமான வரி அலுவலகம் இது தொடர்பாக விரிவான ஆய்வு செய்தால் மிக பெரிய முறைகேடு அம்பலம் ஆகும்.
எனவே, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி கட்டணம் அரசின் கருவூலம் மட்டுமே வசூல் செய்ய உத்தரவிட வேண்டும். அதேபோல, தனியார் பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர் மற்றும் ஊழியரின் ஊதியம் அரசின் கருவூலம் மூலமாக கொடுக்கப்பட ஆணையிட வேண்டும்" என்று கோரியுள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை செயலாளர்களின் பதிலை அறிக்கையாக அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.