பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ஜி. சுந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார்.
அந்த மனுவில், "மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) சட்டத்தை அமல்படுத்தி நேரடியாக வரி வசூலிக்கும்போது, அதனால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்குவோம் என உறுதியளித்தது.
அதாவது, ஐந்து ஆண்டுகளுக்கு மாநில அரசுகளின் வருவாய் இழப்பைச் சரி செய்யும்விதமாக இந்த இழப்பீட்டை மத்திய அரசு வழங்கும். இந்தச் சட்டத்தின் பிரிவு 7(2) இன்படி, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வருவாய் இழப்பைக் கணக்கிட்டு மாநில அரசுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்.
நிதியாண்டு இறுதியில், மொத்தமாக வருவாய் மற்றும் வருவாய் இழப்பைக் கணக்கீட்டு, இழப்பீடு தொகையை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்.
ஆனால், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் ஆகஸ்டு 31ஆம் தேதிவரை தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய 12 ஆயிரத்து 250 கோடியே 50 லட்சம் ரூபாயை இதுவரை மத்திய அரசு வழங்கவில்லை.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
மத்திய அரசு ஜி.எஸ்.டி. இழப்பீடு சட்டப்பிரிவு 7(2) இன்படி செயல்படுவது இல்லை. இவ்வாறு பெரும் தொகையை மத்திய அரசு கொடுக்காமல் இருப்பது, தமிழ்நாடு மக்களின் அடிப்படை உரிமையையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் விதமாக உள்ளது.
அதாவது, இந்த ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை ஏப்ரல், மே மாதங்களுக்கு, மே 31ஆம் தேதியும், ஜூன், ஜூலை மாதங்களுக்கு ஜூலை 31ஆம் தேதியும் வழங்க வேண்டும். ஆனால், இந்தத் தொகையை சட்டப்படி மத்திய அரசு வழங்காதது, அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.
எனவே, ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.