தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை தொடர்பாக மதுரையைச் சேர்ந்த தவமணி தேவி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார்.
அம்மனுவில், "இந்தியாவில் இறுதியாகத 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) தனியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைசெய்தும் தனிக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கணக்கெடுப்பு முறையாக இல்லாததால் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும்போது பல்வேறு பிரச்னைகள் எழுந்துவருகின்றன.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கணக்கெடுப்பைத் தனியாக நடத்தி, தரவுகளை வைத்திருக்கும் பட்சத்தில் நிர்வாக ரீதியில் இட ஒதுக்கீடு தொடர்பான பல்வேறு முடிவுகள் எடுப்பதற்கு உதவியாக இருக்கும் எனச் சமூக நீதி சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.
எனவே, வரும் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தேசிய அளவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கணக்கெடுப்பை தனியாக மேற்கொள்ள வேண்டுமென்ற தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை பரிசீலனை செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்திருந்தார்.
இந்த மனுவானது, மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், "1992ஆம் ஆண்டு ஓ.பி.சி. வகுப்பினரைத் தனியாக கணக்கெடுக்க உத்தரவு பிறப்பித்த நிலையில், இன்றுவரை அதனை நடத்த மத்திய அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது, கணக்கெடுப்பு நடத்தினால்தானே ஒதுக்கீடு தொடர்பான பல முடிவுகளை எடுக்க இயலும்?" எனக் கேள்விகளை எழுப்பியது.
மேலும், இது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.