முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டு காலமாக பேரறிவாளன் சிறைவாசத்தை அனுபவிக்கிறார்.
சென்னையை அடுத்த புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் சிகிச்சைப் பெற தற்போது 30 நாள் பரோல் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட பிற உடல்நல குறைபாடுகள் காரணமாக மேல் சிகிச்சைப் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இந்நிலைய்ல், வரும் ஒன்பதாம் தேதியுடன் பரோல் முடிவடையும் நிலையில், அவருக்கு கூடுதலாக 30 நாள்கள் பரோல் வழங்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில் "கரோனா பரவல் அச்சுறுத்தல் மற்றும் பிற மருத்துவ தேவைகளுக்காக தொடர்ந்து சிகிச்சை பெறவேண்டி இருப்பதால் கூடுதலாக 30 நாள் அவகாசம் அளிக்க வேண்டும். உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் பின்பற்றுவதாக உறுதியளிக்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவானது, நாளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.