தமிழ்நாட்டின் மாஸ்கோ என அழைக்கப்பட்ட அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சையின் பட்டுக்கோட்டையை பூர்வீகமாகக் கொண்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பொதுவுடைமைக் கொள்கையாளராக இருந்தாலும், திராவிட இயக்கத்தின் மீதும் ஈடுபாடு கொண்டிருந்தார்.
பள்ளிப்படிப்புகூட முடித்திராத அவர் சமூகத்தைப் படித்திருந்தார். விவசாயம், ஆடு மாடு மேய்த்தல், மாடு வியாபாரம், பழ வியாபாரம், மீன் பிடித்தல், உப்பளத் தொழிலாளி, மிஷின் டிரைவர், தண்ணீர் வண்டிக்காரர், பாடகர், நாடக நடிகர், பாடலாசிரியர் என அவர் பார்த்திராத தொழில் இல்லை. பழகிடாத தொழிலாளர்கள் இல்லை.
அதனால்தான் என்னவோ, பிற கவிஞர்கள் நிலவைப் பாடு பொருளாக கொண்டிருந்த காலத்தில், களத்து மேட்டையும், கழனிவெளியில் உழைக்கும் விவசாயிகளின் பாடுகளையும் அவர் பாடிக்கொண்டிருந்தார். காதல், காமம், பக்தி எனத் தொக்கி நின்றிருந்த திரைப்பாடல்களுக்கு மத்தியில், புரட்சி, பொதுவுடைமை, முற்போக்கு, பகுத்தறிவு, விடுதலை போன்ற கருத்துக்களை விதைத்து, புது வேகம் பாய்ச்சினார்.
திராவிட தேசியக் கவி பாரதிதாசனிடம் கவிபயின்ற கல்யாணசுந்தரம், எளிய மொழி நடையில் வறியர்களின் அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்கான கருத்துகளை வலியுறுத்திப் பாடியதால் ’மக்கள் கவிஞர்’ என தான் வாழும் காலத்திலேயே போற்றப்பட்ட பெருமைக்குரியவராவார்.
தமிழ்க்கவி உடுமலை நாராயணகவி, தஞ்சை ராமையாதாஸ் போன்றோர் கொலோச்சி வந்த அந்த காலத்தில், அநாயசமாக அங்கு தனது தடத்தை பதித்தவர் பட்டுக்கோட்டையார். பெரும்பாலும் நாட்டாறவியல் பண்ணைத் தழுவிய அவரது பாடல்கள், உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக ஒலித்தன. உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டின. உழைப்போரின் ஒன்றிணைவை, அதன் மூலம் பெற வேண்டிய உரிமைகளை வலியுறுத்தின.
பாட்டாளிகளின் ஆதங்கத்தையும், உழைப்பாளிகளின் ஆவேசத்தையும், கருத்துச் செறிவு, கற்பனை வளத்துடன் படைத்தார். "காடு வெளஞ்சென்ன மச்சான், நமக்கு கையும் காலும் தானே மிச்சம்" எனப் பாடல் எழுதியதோடு நில்லாமல், கீழைத்தஞ்சையில் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடிய தோழர்கள் சாம்பவனோடை சிவராமன், வாட்டாக்கு இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்களித்தவர்.
தான் அரசியல் தலைவராக மக்கள் மனதில் உருவெடுக்க காரணமாக இருந்தது பட்டுக்கோட்டையார் பாடல்கள் தான் என எம்.ஜி.ஆரே சொல்லியிருக்கிறார் என்றால், அவரது எழுத்திற்கு மக்களிடையே இருந்த செல்வாக்கு எவ்வளவு பெரியது என்பதை நம்மால் உணர முடியும்.
ஒட்டுமொத்த நாட்டையும் தனியாருக்குத் தாரை வார்த்துவரும் அரசைப் பார்த்து, "தனி உடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா - தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா" எனக் கேள்விகேட்ட அவரது எழுத்துகள், இன்று வரை சமுதாயத்திற்கு பொருந்தி போகக்கூடியவை.
தமிழ் இலக்கிய உலகில் ’மகாகவி பாரதியார் வழித்தோன்றல்’ என்ற மரபு தொடர்ந்ததைப் போல, தமிழ்த் திரையுலகில் ’பட்டுக்கோட்டையார் வழித்தோன்றல்’ என்ற மரபை அவரே உருவாக்கினார். சமூக அக்கறை மிகுந்த பாடல்களை எழுதும் இளைய தலைமுறையினருக்கு, இந்தப் பாவலன் என்றுமே ஒரு வழிகாட்டி என்று சொன்னாலும் அது மிகையில்லை.
வர்க்க சிந்தனை, வாழ்க்கைப் போராட்டம், காதல் பயணம் என வாழ்க்கையின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் பட்டுக்கோட்டையாரின் பாடல் வழியே வெளிவந்து எளிய மனிதர்களைச் சென்றடைந்தன.
தன்னுடைய உதவியாளர்களின் பாடல்களை தனதெனக்கூறி பாராட்டுகளையும், பரிசில்களையும் வெட்கமே இல்லாமல் பெற்றுச் செல்வோரும், அனைத்து பாடல்களும் தனக்கே தருவதாக இருந்தால் மட்டுமே எழுத முடியுமென கண்டிஷன் போடும் கவிப்பேரரசர்களும் வாழ்ந்துவரும் மண்ணில், அடுத்தவருக்குப் போகவேண்டிய பாடல்கள் தவிர்த்து தனக்கு வந்தபோதும் என, அதை மறுத்து ஒதுக்கிய பண்பாளரென கவிஞர் உலகம் போற்றும் பெருந்தகை பட்டுக்கோட்டையார்.
மண்ணின் கவிஞர், மக்கள் கவிஞர், பொதுவுடமைக் கவிஞர், புரட்சிக் கவிஞரின் திரையுலக வாரிசு என்றெல்லாம் போற்றப்பட்ட அவர், 10 ஆண்டு கால தமிழ் சினிமா பாட்டுத்துறையின் மூடிசூடாத மன்னனாகவே விளங்கினார்.
எம்.ஜி.ஆர் நடித்த ‘நாடோடி மன்னன்’, ‘அரசிளங்குமரி’, ‘கலை அரசி’, ‘சக்கரவர்த்தி திருமகள்’, ‘மகாதேவி’, ‘விக்கிரமாதித்தன்’, ‘திருடாதே’, சிவாஜி கணேசன் நடித்த ‘மக்களைப் பெற்ற மகராசி’, ‘அம்பிகாபதி’, ‘இரும்புத்திரை’, ‘உத்தமபுத்திரன்’, ‘பதிபக்தி’, ‘தங்கப்பதுமை’, ‘பாகப்பிரிவினை’, ‘புனர் ஜென்மம்’ போன்ற படங்களில் அவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் வெற்றிவாகை சூடியவை.
திரையுலகில் 180 பாடல்கள்தான் அவர் எழுதினார் என்றாலும் அவற்றில் பல காலத்தால் அழியாதவை. பத்தொன்பதாவது வயதில் கவிபுனையத் தொடங்கிய கல்யாணசுந்தரம், தன்னுடைய 29ஆவது வயதில் புகழின் உச்சியில் நின்றிருந்தபோதே உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தார்.
நாட்டுடைமையாக்கப்பட்ட அந்த பொதுவுடைமைக்காரனின் பாடல்கள், இன்றும் என்றும் கலகம் செய்து கொண்டிருக்கும்!