திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை அடுத்துள்ள ஆலங்காயம் கோமுட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். பெருமாள் வெல்டிங் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது இளைய மகன் சீனிவாசன்.
அண்மையில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்ற சீனிவாசன், கரோனா ஊரடங்கு விடுமுறை காலத்தில் தொடர்ந்து கைப்பேசியில் பப்ஜி கேம் விளையாடுவதில் அதிக நாட்டம் கொண்டிருந்ததாக அறியமுடிகிறது.
இந்நிலையில், மத்திய அரசு பப்ஜி உள்ளிட்ட விளையாட்டு செயலிகளுக்கு தடை விதிப்பதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று மதியம் வீட்டிற்கு திரும்பிய பெருமாள், சீனிவாசனிடம் பப்ஜி கேம் விளையாடுவது தவறு என்றும் மத்திய அரசு தடை செய்துவிட்டதால் இனி அதனை விளையாடக் கூடாது என்றும் அறிவுரை கூறியுள்ளார்.
மேலும், சீனிவாசனிடம் இருந்த கைப்பேசியை எடுத்து வைத்துக் கொண்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவர் சீனிவாசன் வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வழக்கம்போல சீனிவாசனின் அறைக்கு சென்று பார்த்தப்போது, அவர் தூக்கில் தொங்கியபடி இருந்ததைப் பார்த்த பெருமாள் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஆலங்காயம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர் சீனிவாசனின் சடலத்தை கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வு சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆலங்காயம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவன் சீனிவாசன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.