சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று (செப்.21) திடீரென வருகை புரிந்தார்.
அதிமுக மூத்த உறுப்பினர்களான செம்மலை, ரபி பெர்னாட் உள்ளிட்ட தனது ஆதரவாளர்களுடன் அவர் அங்கு தீவிர ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
அதிமுகவில் ஒரே கட்சி தலைமை, ஒரே ஆட்சி தலைமை என ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவரும் சூழலில் அதிமுகவையும், ஆட்சியையும் அவர் மீண்டும் கையகப்படுத்த முயல்வதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டுவருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அஇஅதிமுக இன்னும் தனது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை காட்டுவதற்கே இந்த திடீர் ஆலோசனை கூட்டம் நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, அதிமுகவின் தலைமைச் செயற்குழு கூட்ட பணிகளுக்குத்தான் கழக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமைக் கழகம் வந்ததாக அங்கிருக்கும் ஊழியர்கள் தெரிவித்தனர்.