திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை, பூத் கமிட்டி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்டம்பர் 12) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கி பேசினார்.
அப்போது கட்சி நிர்வாகிகளிடையே பேசிய அவர், "100 ஆண்டுகளானாலும் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்ததைப் போன்று தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் சிறப்பாக செயல்பட்டு அதிமுகவை வழிநடத்தி வருகின்றனர்.
அடிமட்ட தொண்டனும் அதிமுகவில் உயர் பதவிக்கு வர முடியும். அந்த வாய்ப்பை பயன்படுத்தி ஒவ்வொரு உறுப்பினரும் கடுமையாக உழைத்து சமூகப் பணியாற்றி வெற்றிப்பாதையில் சென்றிட வேண்டும். வருங்காலத்தில் அதிமுகவில் உயர்வான பதவியை அடைய வேண்டும்" என தெரிவித்தார்.
முன்னதாக, திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்துள்ள கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருத்தணி கோ.ஹரி, மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பி.வி.ரமணா ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர் படிவங்களை வழங்கினர்.