இது தொடர்பாக நேற்று (நவ.02) திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "கரோனா தொற்றைக் காரணம்காட்டி பட்டாசு வெடிக்க ராஜஸ்தான் மாநில அரசு தடை விதித்திருப்பது மிகுந்த வேதனைக்குரியது. இந்தப் பேரிடரால் ஏற்கனவே பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு தயாரிப்பாளர்களும் பொருளாதார ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் தடுமாற்றத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். இப்படியொரு துயரம் மிகுந்த சூழலில், தீபாவளிப் பண்டிகைதான் அவர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. ஆனால் அந்தப் பண்டிகைக் காலத்திலும் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று போடப்பட்டுள்ள இந்தத் தடை, ஒட்டுமொத்த பட்டாசுத் தொழிலுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.
பல்லாயிரக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்களின் நலன் கருதி பட்டாசு வெடிக்க விதித்திருக்கும் தடையை ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.