கேரளாவின் இடுக்கி மாவட்டம் பெட்டிமுடி பகுதியில் ஆகஸ்ட் 6ஆம் தேதி நள்ளிரவு பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் டாடா தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 55 பேர் உயிரிழந்தும் 16 பேர் மாயமாகியும் உள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து வழங்க வேண்டுமென கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 12) தொலைப்பேசி வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இடுக்கி நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள நமது தமிழ்ச் சகோதர சகோதரிகளுக்கு உதவிகள் வழங்கிடுமாறு கேரள முதலமைச்சரின் கேட்டுக் கொண்டேன். மேலும், அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரண இழப்பீட்டை அதிகரித்திடுமாறும் வலியுறுத்தினேன்" என கூறியுள்ளார்.