மலைகளும், மரங்களும் சூழ்ந்து காணப்படும் தென்காசி மாவட்டத்தை பேணும் வகையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல தன்னார்வ அமைப்புகள் பணியாற்றி வருகின்றன.
அந்த வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மியாவாகி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட அடர் வன உருவாக்க நடவு என்னும் பாணியை பின்பற்றி செயல்பட்டுவரும் ப்ராணா மரம் வளர் அமைப்பினரும் மாவட்ட நிர்வாத்துடன் இணைந்து பணியாற்றிவருகின்றனர்.
தென்காசியின் பல்வேறு பகுதியில் மியாவாகி அடர் வனத்தை உருவாக்கி வருகின்ற ப்ராணா மரம் வளர் அமைப்பினர் அதன் ஒரு பகுதியாக, ஆயிரப்பேரி சிற்றாற்று கரையையொட்டிய பகுதியில் அடர்வனம் உருவாக்கும் முயற்சியில் இறங்கினர்.
அதற்காக பொதுப்பணித் துறையின் அனுமதி பெற்று, அந்த இடத்தில் வளர்ந்திருந்த சீமைக் கருவேல்மரங்களை அழித்து, சுத்தப்படுத்தி மரக்கன்றுகளை நடவு செய்ய நிலத்தை சீர்ப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் மரக்கன்று நட்டு அடர் வன உருவாக்கும் முயற்சியை தொடங்கிவைத்தார்.
இது தொடர்பாக பேசிய ப்ராணா மரம் வளர் அமைப்பினர், "சிற்றாற்று கரையை ஒட்டிய இந்த பகுதியில் முதல்கட்டமாக 500 மரக்கன்றுகள் நடப்பட்டன. 3 அடி இடைவெளி வீதம் சுமார் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நட ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.
ஆற்றங்கரையோரம் வளரக்கூடிய இலுப்பை, நீர் மருது, புன்னை மரம் போன்றவை அதிகமாக நடப்பட உள்ளன. அரியவகை மரங்கள் மற்றும் பறவைகள், அணில்கள் போன்ற சிறு உயிரினங்களுக்கு இரை கிடைப்பதற்கான பழவகை மரக்கன்றுகள் என 45 வகையான மரக்கன்றுகள் நடப்படும்"என கூறினார்.