நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மின் துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கமணி கூறுகையில், "எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியை குற்றஞ்சாட்டுவது வாடிக்கையான ஒன்று. தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது. கரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் உலகமே திணறியபோது, தமிழ்நாடு அரசு மிக வேகமாக செயல்பட்டு, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் உதவித் திட்டத்தில் போலியாக இணைந்த 1939 பேர் ரூ. 71 லட்சம் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ. 37 லட்சம் பணம் இதுவரை திரும்ப பெறப்பட்டுள்ளது. மீதி தொகை விரைவில் திரும்ப பெறப்படும். இத்திட்டத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பருவமழைக் காலம் தொடங்க உள்ள நிலையில் அதனை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம், கடந்த வாரமே ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி செய்ய வேண்டிய அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துவிட்டது" என தெரிவித்தார்.
முன்னதாக, ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி கரோனா தொற்றால் உயிரிழந்த வட்டாட்சியர் சந்திர மாதவன், இளநிலை வருவாய் ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோரது உருவ படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.