முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சி இரண்டாக பிளவுபட்டது. தொடர்ந்து, கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது சசிகலா அணி - ஓபிஎஸ் அணி என அதிமுகவினர் இரண்டாகப் பிரிந்து இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரியபோது, தேர்தல் ஆணையம் அச்சின்னத்தை முடக்கியது.
அப்போது டிடிவி தினகரனிடம் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதாகக் கூறி இடைத்தரகராக செயல்பட்ட சென்னையைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர், டெல்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 1.30 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் ஆணைய உறுப்பினர்களிடம் லஞ்சமாக அப்பணத்தைக் கொடுக்க சொன்னதாக சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சுகேஷ் சந்திரசேகர், டிடிவி தினகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து சிறை தண்டனை அனுபவித்து வந்த சுகேஷ் சந்திரசேகர், தற்போது அவரது தந்தையின் உடல்நிலை மோசமாகி உள்ளதை அடுத்து 15 நாள்கள் பரோலில் வெளிவந்து, அடையாறு எல்.பி. சாலையில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார்.
அவருடன் சுமார் 10க்கும் மேற்பட்ட டெல்லி காவல் துறையினர் சுகேஷ் சந்திரசேகருடன் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து கடந்த 24ஆம் தேதியுடன் சுகேஷ் சந்திரசேகரின் பரோல் முடிவடைந்த நிலையில், தனக்கு கரோனா தொற்று இருப்பதாகத் தெரிவித்து பரோலை நீட்டிக்ககோரி நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சுகேஷ் சந்திரசேகர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று பரிசோதனை எடுக்க வேண்டும் எனவும், கரோனா தொற்று இல்லை என்றால் புழல் சிறையில் அவரை அடைக்கக்கோரியும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன் அடிப்படையில் டெல்லி - சென்னை காவல் துறையினர் இணைந்து சுகேஷ் சந்திரசேகரை கரோனா பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு நேற்று (அக். 30) அழைத்துச் சென்றனர்.