மிலாது நபியை முன்னிட்டு அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மனித குல வாழ்க்கை சீர்படுவதற்காகவும், சகோதரத்துவத்தை நிலைநாட்டிடவும் எண்ணில் அடங்காத துன்பங்களைத் தாங்கி, யுத்தகளத்திலும் வாள் ஏந்தி, போற்றுதலுக்குரிய இஸ்லாமிய மார்க்கத்தை உலகத்தில் நிலைநாட்டிய, நானிலம் போற்றும் அண்ணலார் நபிகள் நாயகம் பிறந்த தின விழாவை, உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் உவகையுடன் கொண்டாடும் திருநாள்தான் மீலாது நாள் ஆகும்.
அண்ணலாரின் ஏற்றுக்கொண்ட ஏக இறைக் கொள்கையைக் கைவிடக் கூறிய குறைஷிகள், நபிகளாரிடம் எது வேண்டுமானாலும் தருகிறோம்; அள்ளக் குறையாத செல்வங்கள், திராட்சைத் தோட்டங்கள், ஓங்கிய மலைகள், எண்ணற்ற ஒட்டகங்கள் அத்தனையும் தருகிறோம் என்றார்கள்.
எனது வலது கரத்தில் சூரியனையும், இடது கரத்தில் சந்திரனையும் தந்தாலும் என் கொள்கையில் இருந்து துளி அளவும் மாற மாட்டேன் என்ற இலட்சிய உறுதியுடன் போராடி, அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த அரபிகளின் வாழ்வில் மகத்தான மறுமலர்ச்சி கண்ட மாமனிதர் நபிகள் நாயகம், மண்ணின் வரமாய், பொன்னின் மணியாய் உலகோருக்கு உன்னத மார்க்கத்தைப் போதித்தார்.
நாம் அனைவருமே சகோதரர்கள், ஏற்றத்தாழ்வு அற்றவர்கள் என்று அரபாத் பெருவெளியில் முழங்கி, அழகிய முன்மாதிரி என அவனியோர் போற்றும் அண்ணலார் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளாம் இப்பொன்னாளில், தமிழ்நாட்டில் சமய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க உறுதி கொள்வதோடு, இஸ்லாமியப் பெருமக்களுக்கு மதிமுக சார்பில் நெஞ்சினிக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்" என கூறியுள்ளார்.