தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் (தந்தை), பென்னிக்ஸ் (மகன்) ஆகிய இருவரை காவல்நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்து, அவர்களின் மரணத்திற்கு காரணமான ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ அலுவலர்கள் தற்போது தீவிரமாக நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள காவலர் செல்லத்துரை பிணை கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த பிணை மனுவானது, மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தாண்டவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது காவலர் செல்லத்துரை தரப்பு வழக்குரைஞரும், சி.பி.ஐ தரப்பு வழக்குரைஞரும் காணொளி காட்சி வாயிலாக வாதம் நடத்தினர்.
சத்தான்குளம் படுகொலை வழக்கு தொடக்க நிலை விசாரணையில் இருப்பதாலும், சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதாலும், காவலர் செல்லத்துரையின் பிணை மனுவை தள்ளுபடி செய்ய சி.பி.ஐ தரப்பு வாதம் வழக்குரைஞர் விஜயன் செல்வராஜ் வேண்டுகோள் விடுத்தார்.
இதனைத்தொடர்ந்து சி.பி.ஐ தரப்பு வழக்கறிஞர் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, செல்லத்துரையின் பிணை மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.