திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த நாராயணமூர்த்தி என்பவர், குமரிகண்டம் குறித்து ஆய்வு செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில், "தமிழர்களின் பழம்பெரும் அடையாளமாக குமரிக்கண்டம் விளங்கியது என்பதை தொல்காப்பியம், அகத்தியம் உள்பட பல்வேறு பழங்கால நூல்கள், இலக்கியங்கள் மூலம் தெரியவருகின்றது. ஆய்வு அடிப்படையில் கடல் மட்டம் கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் உயர்ந்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதன் அடிப்படையில், குமரிகண்டம் கடலில் மூழ்கியிருக்கலாம் என்பது உறுதி செய்யப்படுகிறது.
கடலியல் ஆய்வாளர் ஒரிசா பாலு என்பவர் குமரிகண்டம் தொடர்பாக மேற்கொண்டு வரும் ஆய்வில், தமிழ் மொழியின் 30 விழுக்காடு தற்போது மடகாஸ்கரில் வாழ்ந்துவரும் பழங்குடியினர் பயன்படுத்தி வருவது தெரியவந்தது. கடலோடு தொடர்புடைய பல பழங்குடியினங்களுக்கும் தமிழர்களுக்கும் ஒற்றுமை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மகாபாரதத்தின் அடிப்படையில் குஜராத் மாநிலம் துவாரகாவில் நீருக்கடியில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசும், தேசிய கடல்சார் நிறுவனமும் இணைந்து பூம்புகாரில் நீருக்கடியில் ஆராய்ச்சியை மேற்கொண்டன. அதேபோல, நீருக்கடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டால் குமரிகண்டம் தொடர்பான ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளியாகலாம். எனவே, குமரி மாவட்டத்திற்கு தென் பகுதியில் நீருக்கடியில் தொல்லியல் ஆராய்ச்சி மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பாக இன்று (அக்டோபர் 28) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், "கடல் கொண்ட குமரிகண்டம் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஆய்வாளர் ஒரிசா பாலு, இது தொடர்பான தகவல்களை நீதிமன்றத்திற்கு வழங்க உதவ வேண்டும் எனக் கூறி, இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்தது.