தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளில் மீன் வளர்க்க ஏலம் விடும் அரசின் விதிமுறைகள் தொடர்பாக தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த மணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில்,"போடி அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள மீனாட்சியம்மன் கண்மாய் மற்றும் குளத்தில் மீன், பாசி உள்ளிட்டவற்றை ஏலம் விடும் விதிமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை மதுரை கிளை நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையிலான அமர்வுக்கு முன்பு நடைபெற்றுவந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது மனு மீதான வாதப் பிரதிவாதங்களை ஆராய்ந்த நீதிமன்றம்,"தற்போது குளங்கள், கண்மாய், ஏரிகள் போன்றவற்றை பொதுப்பணித்துறை, வருவாய்துறையினர் தனி நபர்களுக்கு மீன் வளர்க்க ஏலம் விடுகின்றனர். அவ்வாறு ஏலம் எடுத்தவர்கள், ஏலம் எடுத்த குளத்தில், நீண்ட தொலைவில் இருந்து மேய்ச்சலுக்கு வரும் மாடுகளையும், கிடாய் மாடுகளையும் தாகத்திற்கு நீர் அருந்தக் கூட அனுமதிப்பதில்லை. பறவைகளைக் கூட வெடி வைத்து விரட்டுகின்றனர்.
கால்நடைகளை நீர் அருந்த அனுமதிக்காததால், தாகத்துடன் பல மைல்தூரம் செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது" இதனை சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் தனது நூலில் பதிவு செய்துள்ளார். இது மிகவும் வேதனையான நிகழ்வு.
ஆகவே, தமிழ்நாடு அரசு இனிவரும் காலங்களில் கண்மாய், குளங்களை மீன் வளர்க்க ஏலம் விடும் போது, மேய்ச்சலுக்கு வரும் மாடுகள் குளத்தில் தண்ணீர் அருந்த அனுமதி வழங்க விதிமுறை நிபந்தனைகளை மாற்றியமைக்க வேண்டும். குளம், கண்மாய்களை ஏலம் எடுத்துவர்கள் இந்த மண்ணில் தொன்றுதொட்டு நிலவும் கிராம மக்களின் பழக்கவழக்கங்களை மதிக்க வேண்டும்" என உத்தரவு பிறப்பித்தது.