அண்மையில் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் கே. பி. ராமலிங்கம் இன்று (நவ. 21) சென்னை தி. நகர் கமலாலயத்தில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி மற்றும் தமிழ்நாடு மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பொன். ராதாகிருஷ்ணன், எச். ராஜா, வானதி ஸ்ரீனிவாசன், கரு. நாகராஜான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சி.டி.ரவி, கே.பி. ராமலிங்கம் வருகையால் திமுக பலம் இழந்து, பாஜகவின் பலம் கூடியிருக்கிறது. அவரை முழுமனதோடு வாழ்த்தி வரவேற்வேற்கிறோம் என்றார்.
தொடர்ந்து பேசிய மாநிலத் தலைவர் எல். முருகன், "எம்எல்ஏ, எம்பி எனப் பல்வேறு நிலையில் தன்னுடைய அரசியல் பணியைத் தொடர்ந்த கே.பி. ராமலிங்கம் இன்று பாஜகவில் இணைந்துள்ளார், இவரின் வருகை எங்களுக்கு மேலும் உத்வேகத்தை கொடுக்கிறது.
ரஜினி அமித் ஷாவை சந்திப்பது குறித்து எங்களுக்குத் தகவல் எதுவும் இல்லை. அரசு நிகழ்ச்சிகளிலும், பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திலும் பங்கேற்கிறார், இதைத் தவிர வேறு எந்தத் திட்டமும் இல்லை" என்றார்.
முன்னதாகப் பேசிய கே.பி. ராமலிங்கம், "பாஜகவின் வளர்சிக்காக உழைப்பேன். எனக்கும் திமுக தலைமைக்கும் சரியாக ஒத்துப்போகாத சூழலில், கருணாநிதிக்குப் பிறகு வேறு யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் எனக்கு இல்லை.
அதனால், எட்டு மாத கால இடைவெளிக்குப் பிறகு திமுகவின் பழைய நினைவுகளை மறந்துவிட்டு, சாதாரண ஒரு தொண்டனாக பாஜகவில் இணைந்துள்ளேன்.
எம்ஜிஆர், கருணாநிதியிடம் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் இன்று தேசிய கட்சியில் என்னை இணைத்துள்ளேன்" என்றார்.