கோவை: கவுண்டம்பாளையத்தில் இளைஞர் ஒருவரை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோவை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், கே.கே.புதூர் அருகேயுள்ள பாலசுப்பிரமணியம் வீதியைச் சேர்ந்தச் ராதாகிருஷ்ணன் என்பவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், "என் மூத்த சகோதரரின் இரண்டாவது மகன் கண்ணன் (28) என்பவர் வெல்டராக உள்ளார். கடந்த 10ஆம் தேதி கண்ணன், கவுண்டம்பாளையத்தில் உள்ள தன் சகோதரர் வீட்டில் இருந்தபோது, நள்ளிரவில் காவல்துறையினர் எனக்கூறி சாதாரண உடையில் வந்த எட்டு பேர் விசாரணைக்காக பெரியநாயக்கன்பாளையம் அழைத்துச் சென்றனர்.
மறுநாள் நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது, பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் கண்மூடித்தனமாக கண்ணனை தாக்கியதில், அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரது உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. கை, விரல், எலும்பு முறிந்துள்ளது. இத்தாக்குதலில் ஈடுபட்ட பெரியநாயக்கன்பாளையம் காவல்நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், கடுமையாக தாக்கியதில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
திருட்டு வழக்கு தொடர்பாக, கண்ணனிடம் விசாரணை நடத்தவே அவரை அழைத்து சென்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.