தமிழ் இசையுலகின் 'கந்தர்வக்குரலோன்' எனப் புகழப்படும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இன்று (செப். 25) உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், மராத்தி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம்வந்த மூத்த கலைஞர் எஸ்.பி.பி. வெறும் பாடகராக மட்டுமல்லாது திரை நடிகராக, இசையமைப்பாளராக, திரைப்படத் தயாரிப்பாளராக தனது திரையுலகப் பயணத்தை தொடர்ந்தவராவார்.
உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தனக்கு லேசான கரோனா தொற்றுதான் என்று தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை எஸ்.பி.பி. வெளியிட்டார்.
அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிறந்த சிகிச்சையின் பலனாக அவருடைய உடல்நிலை தேறிவந்த நிலையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி மீண்டும் மோசமடைந்தது.
தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று தேறிவந்த அவருடைய உடல்நிலை திடீரென்று நேற்று (செப்டம்பர் 24) மீண்டும் மோசமடைந்தது. ஏற்கெனவே இருந்த நுரையீரல் தொற்று, நீரிழிவு நோய் பாதிப்பு மேலும் அதிகரிக்க மிகவும் மோசமான நிலைக்கு அவரது உடல்நிலை சென்றது. அத்துடன், மூளையிலும் ரத்தக்கசிவு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
கடந்த 50 நாள்களுக்கும் மேலாக தொடர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 25) மதியம் சுமார் 1.04 மணி அளவில் அவர் உயிரிழந்தார்.
எஸ்.பி.பி.யின் மறைவு இந்தியத் திரையுலகினரைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவருடைய மறைவுச் செய்தி வெளியானவுடன் கண்ணீர் மல்க தங்களுடைய இரங்கலைத் தெரிவித்துவருகிறார்கள்.
தமிழ் திரையுலகின் திரைப்பட பாடலாசிரியர்களான புலவர் புலமைப்பித்தன், கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் தாமரை உள்ளிட்டோர் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
கவிஞர் தாமரை தனது முகநூல் பக்கத்தில், "சொல்ல ஒன்றுமே தோன்றவில்லையே. ஒரு பாடலைக்கூட நினைவுகூர முடியவில்லையே. மூளை உறைந்தே போய்விட்டது. எங்கள் அருமை எஸ்.பி.பி.யே! சங்கீத ஜாதி முல்லையே... போய் வா. வானத்திலிருந்து மழையாய் விழுவாய்தானே? நீ சிரிக்கும்போதுகூட அதில் சுருதி சுத்தமாக இருக்கும் என்பார்கள். மழையில் இருக்காதா பின்னே? நான் உறைந்து இந்தக் கணம் மறந்த உன் பாடல்களை மழையிலிருந்து மீட்டெடுத்துக் கொள்கிறேன். இனி பொழியும் அந்திமழையின் ஒவ்வொரு துளியிலும் உன்முகம்தான். உன் குரல்தான்" எனப் பதிவிட்டுள்ளார்.
கவிப் பேரரசு வைரமுத்து வெளியிட்ட காணொலியில், "ஆயிரம் காதல் கவிதைகள் பாடிய உனக்குக் கண்ணீர்க் கவிதை வடிக்க வைத்துவிட்டதே காலம்; இசையை இழந்த மொழியாய் கலங்குகிறேன்" எனக் கண்ணீர் வழிய கூறியுள்ளார்.
புலவர் புலமைப்பித்தன் எழுதியுள்ள இரங்கலில், "அடிமைப்பெண் படத்தில் எனது பாடல் வரிகளில் அமைந்த "ஆயிரம் நிலவே வா! ஓர் ஆயிரம் நிலவே வா!" என்ற பாடலின் மூலம் இசை உலகுக்கு அறிமுகமாகி பிறகு பாடும் நிலா பாலு என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பெற்ற எஸ்.பி. பாலசுப்பிரமணியம் காலம் ஆனார் என்ற செய்தி நம்முள் எவருக்கும் ஏற்கமுடியாத ஒன்று. நம்முடன் அவர் இல்லாவிடிலும் அவர் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்களின் மூலம் என்றும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.