மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த மார்ச் 22ஆம் தேதி அனுமதி வழங்கினார்.
இதனையடுத்து, ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடைமையாக மாற்றுவதாக தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்திருந்தது. அரசுடைமையாக மாற்றினாலும், வருமான வரி பாக்கி மற்றும் சட்டப்பூர்வ வாரிசு தாரர்களுக்கான இழப்பீடு காரணமாக, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்த முடியாத நிலையே நீடித்து வந்தது.
இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் இல்லத்தை நினைவிடமாக மாற்ற ஏதுவாக, சென்னை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் 68 கோடி ரூபாய் வைப்பு தொகையாக செலுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பாகவும், அவரது வீட்டை நினைவிடமாக மாற்றவும் தடைக் கோரி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜெயலலிதாவின் 188 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுக்கு அவரது அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோரை சட்டபூர்வ வாரிசுதாரர்களாக அறிவித்து, ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு முன், தீபா மற்றும் தீபக் ஆகியோரின் கருத்துக்களைக் கேட்டு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கையாக தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கு சேர வேண்டிய இழப்பீடு, வருமான வரித்துறைக்குச் செலுத்த வேண்டிய வரி ஆகியவை சேர்த்து, 67.9 கோடி ரூபாயை சென்னை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளது.
இந்த நிலையில், இவ்வழக்கில் வருமான வரித் துறையினர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில்," அசையா சொத்துக்கள் : நிலம் கையகப்படுத்துதல் சட்டம்-2013 படி, 24,322 சதுர அடி கொண்ட வேதா இல்லத்திற்குச் சதுர அடிக்கு 12,060 ரூபாய் என, 29,33 கோடி ரூபாய் அசையா சொத்துக்களின் மதிப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அசையும் சொத்துக்கள் : அரசுடைமை ஆக்கப்பட்ட ஜெயலலிதாவின் வேதா இல்ல வீட்டில் 4.37 கிலோ தங்க ஆபரணங்கள், 14 பொருள்கள், 601.4 கிலோ வெள்ளியிலான 867 பொருள்கள் உள்ளன.
ஜெயலலிதா படித்த 8,376 புத்தகங்கள், 11 டிவி, 38 ஏசி சாதனங்கள், 394 நினைவுப் பரிசுகள் இருப்பதும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதைத் தவிர 6,514 சமையல் பாத்திரங்கள், 556 மரச்சாமன்கள், 108 அழுகு பொருட்களும், 29 டெலிபோன் மற்றும் செல்போன்கள், 15 பூஜைப் பொருட்கள், 10 ஃபிரிட்ஜ், 6 கடிகாரங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா பயன்படுத்திய 10,438 ஆடைகள் உள்ளிட்ட 32,700 அசையும் சொத்துக்கள் உள்ளதாக, வருமானவரித்துறை அலுவலர்கள் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இவ்வழக்கு விசாரணையின்போது, வருமானவரித்துறை தரப்பு, மறைந்த ஜெயலலிதா அரசுக்கு 36.87 கோடி ரூபாய் வரி பாக்கி வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.