தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த மதிவாணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், "தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் 2019ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த 31.01.2020 அன்று வெளியான அரசாணையில் (அரசாணை எண்.16) சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த புதிய விதிமுறைகளின்படி, ஐ.டி.ஐ (சிவில்) முடித்து 5 ஆண்டுகள் வரைப்பட அனுபவம் பெற்றிருப்பின் அவர்களை பதிவுப் பெற்ற பொறியாளராக பதிவு செய்து கொள்ளலாம் என கூறியுள்ளது.
இந்த திருத்தம் ஏற்புடையது அல்ல. மேலும் இது சாத்தியமற்ற ஒன்றாகும். காரணம் ஐ.டி.ஐ சிவில் என்பது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, இரண்டு ஆண்டு தொழிற்கல்வி பயில்வது ஆகும். இந்தத் கல்வித்தகுதியை கொண்டு அரசால் வெளியிடப்பட்டுள்ள கட்டட விதிமுறைகளை புரிந்துகொண்டு வரைப்படம் வரைவதோ அல்லது கட்டடம் கட்டுவதோ சாத்தியமற்றதாகும்.
ஐ.டி.ஐ கல்வித் தகுதி உடையவர்கள், பி.இ., அல்லது டிப்ளோமா படித்தவர்களிடம் ஆலோசனை பெற்று வரைப்படம் வரைவது வழக்கமாக உள்ளது. இதேபோல் ஐ.டி.ஐ கல்வி பாடத்திட்டதில் பிற துறைகளான இயந்திரவியல், மின்னணுவியல், மின்னியல் போன்ற துறைகளில் பட்டயம் முடித்தவர்கள் பொறியாளர் நிலையில் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, இந்த புதிய விதிமுறைக்கு தடை வதிக்க வேண்டும்" என மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், இது குறித்து நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டது.