மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள கொடிக்குளம் கண்மாய், தாமரைப்பட்டி கள்ளாத்தி கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாய்களை பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவினை மதுரை கிழக்கு தாலுகாவை சேர்ந்த பிரபாகரன், வீரணன், உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்தனர்.
அதில், கொடிக்குளத்தில் கண்மாய் 7 ஹெக்டேர் பரப்பிலும், தாமரைப்பட்டியில் உள்ள கள்ளாத்தி கண்மாய் 18 ஏக்கர் பரப்பிலும் அமைந்துள்ளது. இக்கண்மாய்கள்தான் இந்த பகுதியில் உள்ள கிராம மக்களின் விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ளன. ஆனால் கண்மாயில் சிலர் அத்துமீறி நுழைந்து நீர் ஆதாரத்தை கெடுக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். கண்மாய்களில் ஆக்கிரமிப்பு மேற்கொண்டுள்ளனர். இதனால் இப்பகுதி கிராம மக்களின் விவசாயம் பாதிக்கும்.
எனவே, மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள கொடிக்குளத்தில் கண்மாய் , மற்றும் தாமரைப்பட்டியில் உள்ள கள்ளாத்தி கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாய்களை பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் இன்று (அக்.,6) விசாரணைக்கு வந்தது.
அப்போது கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், அத்துமீறல் குறித்து யார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து, காவல் துறை ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை போன்ற கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள் இதுகுறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க உத்தரவிட்டனர். பின்னர், இந்த வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.