விழுப்புரம் நகரப்பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ் (83). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான இவர் அண்மையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரை எப்படி நல்லடக்கம் செய்வதென தெரியாமல் அவரது உறவினா்கள் தவித்தபோது, தமுமுகவின் விழுப்புரம் மாவட்ட மருத்துவச் சேவை அணியினர் இறந்தவரின் உடலை, அவரது உறவினா்களுடன் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
பின்னா், விழுப்புரம் அருகில் உள்ள கிறித்துவ இடுகாட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாநில, மாவட்ட நிா்வாகிகளால், கிறித்துவ முறைப்படி அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அலுவலர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய மதங்களைக் கடந்து மனிதநேயத்தோடு முன்வந்த தமுமுகவினருக்கு பல்வேறு தரப்பினரும் நன்றி தெரிவித்தனர்.