தந்தை பெரியாருக்கு தெற்காசியாவின் சாக்ரட்டீஸ் வழங்கப்பட்டதாக பள்ளி பாடத்திட்டத்தில் உள்ள தவறான தகவலை நீக்க வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சார்பில் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ராம்நகர் குருமூர்த்தி தலைமை தாங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய ராம்நகர் குருமூர்த்தி, "தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பள்ளி மாணவர்களுக்கு தவறான வரலாற்றை போதிக்கும் வகையில் தந்தை பெரியாருக்கு தெற்காசியாவின் சாக்ரட்டீஸ் விருது வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. யுனஸ்கோ நிறுவனம் இதனை மறுத்துள்ளது. எனவே, உடனடியாக தவறான தகவலை பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு முன்பாக உள்ள கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும். கந்தசஷ்டி கவசம் குறித்து கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்ததை போலவே, தற்போது சாட்டை என்ற யூடியூப் சேனல் இத்தகைய விமர்சனங்களை செய்து வருகிறது. எனவே, அதையும் தடை செய்து அதன் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும்.
ஆண்டிற்கு 10 ஆயிரத்திற்கு கீழ் வருமானமுள்ள கோயில்களை திறக்க அரசு உத்தரவிட்டு இரண்டு நாள்கள் கடந்த பிறகும், தஞ்சாவூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களை திறக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்றார்.