திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த சதுப்பேரிபாளையத்தைச் சேர்ந்தவர் ராமஜெயம். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு தனது வீடு உள்ளிட்ட சொத்துக்களை விற்று, பழனி என்பவரின் மனைவி உமா பெயரிலுள்ள புன்செய் நிலத்தை வாங்குவதற்காக ரூ. 10 லட்சம் ரொக்கப் பணத்தை கொடுத்துள்ளார்.
ஆனால், வாங்க நினைத்து அவர் பணம் கொடுத்த நிலத்தில் வில்லங்கம் இருப்பதாக அறிந்து, தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். கடந்த மூன்று ஆண்டு காலமாக பணத்தை திருப்பிக் கொடுக்காமல், பழனி ஏமாற்றி வந்ததாக அறியமுடிகிறது. பணத்தைத் திருப்பிக் கேட்ட ராமஜெயத்தை, கொலை செய்துவிடுவேன் என அடியாட்களை வைத்து பழனி மிரட்டியும் உள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த ராமஜெயம், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரோனா நோய் குறித்த ஆய்வு செய்ய திருவண்ணாமலைக்கு நாளை (செப்டம்பர் 9) வரவிருப்பதால் அலுவலர்களின் கவனத்தை ஈர்க்க ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கொளுத்தும் வெயிலில் தனியாக அமர்ந்து கொண்டு நியாயம் கேட்டு காலை பத்து மணியளவில் போராடத் தொடங்கிய அவரை ஏறத்தாழ மாலை 4 மணியளவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அண்ணாதுரை அழைத்து பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து, ராமஜெயம் அந்த இடத்தைவிட்டு சென்றார்.