திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி உள்ளிட்ட பல்வேறு மலைக் கிராமம் அமைந்துள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இப்பகுதியில் வசிக்கும் மக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை அடைந்த அவர்களுக்கு திண்டுக்கல் ரோட்டரி சங்கத்தினர் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் இணைந்து பல்வேறு உதவிகளை செய்துவருகின்றனர்.
அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தை தாண்டிகுடி, கள்ளகிணறு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு திண்டுக்கல் சரக காவல் துணை தலைவர் முத்துசாமி அத்தியாவசிய உணவுப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை நேற்று வழங்கினார்.
அப்போது பேசிய அவர், " பழங்குடியின மக்களின் கோரிக்கைகளான சாலை வசதி, குடிநீர் வசதி, வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை நிறைவேற்ற உயர் அலுவலர்களிடம் பேசுவேன்.
பழங்குடியின மக்கள் கண்டிப்பாக 18 வயதுக்கு பிறகு பெண்களுக்கு திருமணம் முடிக்க வேண்டும். வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்றால் படிப்பறிவு அவசியம். எனவே, கண்டிப்பாக அனைவரும் பள்ளி படிப்பை இடைநிறுத்தம் செய்யாமல் தொடரவேண்டும். அதற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்" எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன், நக்சல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஜெயசிங் மற்றும் திண்டுக்கல் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.