இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசானது, ஓர் அறிவிக்கை மூலமாக, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வரம்புக்குள், அனைத்து டிஜிட்டல்/ஆன்லைன் ஊடக மேடைகள், ஆன்லைன் மூலம் தகவல்களை அளித்துவரும் சாதனங்கள் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்திருக்கிறது.
இதற்கு முன்பு மத்திய தகவல் மற்றும் மின்னணு தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பல்வேறு சரத்துக்களின் கீழும் இருந்துவந்தன.
இந்த அறிவிக்கையின் மூலமாக, மத்திய அரசு இப்போது டிஜிட்டல் ஊடகங்களில் வெளியிடப்படும் சாராம்சங்களையும் “முறைப்படுத்திட” முன்வந்திருப்பது தெளிவாகிறது.
மத்திய அரசு ஏற்கெனவே அச்சு ஊடகங்களையும், மின்னணு/தொலைக்காட்சி ஊடகங்களையும் கணிசமான அளவிற்குத் தன்வலைக்குள் கொண்டுவந்துள்ள நிலையில், இப்போது டிஜிட்டல் ஊடகத்தையும் கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுத்திருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசுத் துறையால் டிஜிட்டல் ஊடகம் கட்டுப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.
ஏற்கெனவே அமலில் உள்ள சட்டங்களும், தகவல் தொழில்நுட்ப சட்டமும் ஓர் ஆரோக்கியமான டிஜிட்டல் மீடியாவிற்கு போதுமானவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது.
எனவே, டிஜிட்டல் ஊடகங்களுக்கு அரசு நேரடிக் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் வலியுறுத்துகிறோம்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.