கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் மத்திய அரசு அமல்படுத்திய ஊரடங்கில் சில தளர்வுகளை அவ்வவ்போது மேற்கொண்டுவருகிறது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து விழாக்களுக்கும், நிகழ்வுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
கடந்த 7 மாதங்களாக இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தீபாவளி பண்டிகை ஒருவித ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, கரோனா அச்சுறுத்தலை மீறி நாடு முழுவதும் உள்ள மக்கள் தீபாவளிக்கான உடை உள்ளிட்ட பொருள்களை வாங்க கடை வீதிகளை நோக்கி படையெடுத்துள்ளனர்.
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலுக்கு மத்தியிலும் தீபாவளி பண்டிகை விற்பனை களைகட்டியுள்ளது.
மாவட்டத்தின் நகர்ப்பகுதிகளிலுள்ள ஜவுளி கடைகள், சுவாமி சன்னதி சாலையோரத்தில் உள்ள கம்மல், வளையல் உள்ளிட்ட அலங்காரப் பொருள்கள், சாலையோரக் கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் குடும்பத்துடன் தங்கள் குழந்தைகளுக்கு தேவையான புத்தாடைகளையும், பட்டாசுகளையும் வாங்கியபடி உள்ளனர்.
நேற்று மாலை முதல் தென்காசியின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பொழிந்துவந்தாலும் மக்கள் பண்டிகையை நாளையொட்டி பஜார் வீதிகளில் பொதுமக்கள் அலைமோதி வருகின்றனர்.
கூட்ட நெரிசலை கண்காணிக்கும் வகையிலும், திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்ட கண்காணிப்பாளர் சுகுணா சிங் உத்தரவின் பேரில் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா ஊரடங்கால், வருவாயை இழந்து தவித்துவந்த சிறு கடை வியாபாரிகள், சாலையோர வணிகர்கள் பண்டிகை கால விற்பனை அதிகரிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.