உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியுள்ள கோவிட்-19 பரவல் காரணமாக கடந்த 7 மாதங்களாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது.
தொற்றுநோய் பரவல் அதிகரித்ததன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டன.
தற்போது, நோய் பரவல் குறைந்துவருவதன் காரணமாக அரசு நிர்வாகங்கள் கல்லூரிகளை திரும்ப ஒப்படைத்து வருகின்றன.
இந்த நிலையில் வரும் 16ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளி - கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
ஆனால், அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கடும் எதிர்ப்பு வந்ததை அடுத்து பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் சுமார் 12 ஆயிரம் பள்ளிகளில் பயின்றுவரும் மாணவர்களின் பெற்றோர்களிடம் இணையவழியில் இன்று கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் கூறப்பட்ட கருத்துகளை ஆராய்ந்து கல்லூரிகள் திறப்பது குறித்து வரும் 12ஆம் தேதி அறிவிக்கப்படும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.