குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ.) திரும்பப்பெறக் கோரியும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆர்.), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) ஆகியவற்றிற்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தினர்.
திருவாரூர்
அப்போது இந்தச் சட்டங்களை தமிழ்நாட்டில் நிறைவேற்றக் கூடாது, இச்சட்டங்களுக்கு எதிராக மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்நிலையில் திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் அமைப்பின் மாவட்ட தலைவர் எம். முகமது பாசித் தலைமையில் கண்டன பேரணி நடந்தது.
பேரணியானது விளமல் வழியாக மன்னார்குடி சாலைவரை சென்றது. இந்தப் பேரணியில் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் தங்களின் கைகளில் இந்திய தேசியக் கொடியை ஏந்தி சென்றனர்.
இந்தப் போராட்டம் காரணமாக மன்னார்குடி, தஞ்சாவூர், திருவாரூர் சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியில் 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.
திருவள்ளூர்
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டம் திருவள்ளூரில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகில் நடந்தது. உழவர்சந்தையிலிருந்து தொடங்கிய பேரணியானது சி.வி. நாயுடு சாலை வழியாக மீரா திரையரங்கம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை வரை வந்து நிறைவடைந்ததது.
இதையடுத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இந்நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைகளில் இந்திய தேசியக் கொடிகளை பிடித்தவாறு கலந்துகொண்டனர். நிறைவாக கண்டன ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
ராமநாதபுரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ராமநாதபுரம் டி- பிளாக் அருகே மாபெரும் பேரணி நடந்தது. இந்தப் பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்றது. பேரணியின்போது குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராகக் கோஷமிட்டனர்.
பேரணியானது மாவட்ட செயலாளர் ஆரிப் கான் தலைமையில் நடந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்தப் பேரணியால் சுமார் இரண்டு மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து வாகனங்கள் செல்ல அம்மா பூங்கா வழியாக மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகே நடந்த பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்தப் பேரணியில் இந்தியா எங்கள் தாய்நாடு. எங்கள் வழிபாடு இஸ்லாம். மதரீதியில் மக்களைப் பிரிக்கும் மத்திய அரசை கண்டிக்கிறோம் எனக் கோஷமிட்டனர்.
அந்தப் பகுதிகளில் சுமார் 200 காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்களுக்கு எளிதில் குடியுரிமை கிடைக்க வழிவகை செய்கிறது.
இதையும் படிங்க: சி.ஏ.ஏ. திரும்பப் பெற வலியுறுத்தி தவ்ஹீத் ஜமாத் பேரணி