எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆண்டு மாநாட்டு நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 7) தொடங்கியது. கோவிட் -19 நெருக்கடி அதன் பாலின தாக்கங்கள் குறித்த குழு கலந்துரையாடல் காணொலி சந்திப்பில் நேற்று (ஆகஸ்ட் 8) நடைபெற்றது.
மூன்று நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் ‘கோவிட்-19 நெருக்கடியும் பரந்த சுகாதார பாதிப்புகளும்' என்ற தலைப்பில் நேற்று இணைய கலந்துரையாடல் நடைபெற்றது. அதில், சிறப்பு விருந்தினராக உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியலாளர் மருத்துவர் சௌமியா சுவாமிநாதன் பங்கேற்றார். காணொலி வாயிலாக சிறப்புரையாற்றிய மருத்துவர் சௌமியா சுவாமிநாதன், "உலக நாடுகள் முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த உலகளாவிய ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பெண்களின் மீதான சுமை அதிகரித்துள்ளது. அவர்களது சமூகப் பாதுகாப்புகள் சீர்குலைந்துள்ளன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கும்பல் வன்முறைகள், குடும்ப வன்முறைகள் அதிகரித்திருக்கின்றது. பணி செய்யும் பெண்களின் வேலைவாய்ப்புகள் முற்றிலுமாக பறிபோயுள்ளது. அவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பல்வேறு நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமை அமைப்புகளிடம் இருந்து ஏராளமான அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க தேவையான உடனடி நடவடிக்கைகளை அனைத்துலக நாடுகளும் முன்னெடுக்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாலியல் வன்முறையிலிருந்து தப்பி பிழைத்தவர்களுக்கான பிரத்யேக உதவிகளை வழங்குவது மிக முக்கியம் என நாங்கள் நினைக்கிறோம். எனவே, இதனை உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளோம். கரோனா பாதிப்பு மருத்துவ வசதி குறைப்பாடுகளை உலகளவில் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. இதன் விளைவாக பல நாடுகளில் கருக்கலைப்பு மற்றும் கருத்தடை சேவைகள் தடைபட்டுள்ளன.
கோவிட்-19க்கு எதிரான போரில் முன்னணி வீரர்களாக பணியாற்றிவரும் உலகளாவிய சுகாதாரப் பணியாளர்களில் 70 விழுக்காட்டினர் பெண்களாகவே உள்ளனர். இதன் காரணமாக, சுகாதாரப் பணியாளர்களிலும் பெண்களே கரோனா வைரஸ் பாதிப்பின் அதிக அபாயங்களைக் எதிர்கொண்டுள்ளனர். எனவே, சுகாதாரப் பணியாளர்கள் குறித்த தரவுகளை நாம் முழுமையாக சேகரிக்க வேண்டும்.
இந்த தொற்று நோய் ஆண்களையும், பெண்களையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் கூறுவதும் பாலின வேறுபாடுகள் மற்றும் வயது குழுக்களை விளக்குவதும் மிகவும் கடினமான ஒன்றாகவே உள்ளது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் தரவுகள், பாலியல் மற்றும் வயது வரம்பு அடிப்படையிலான தகவல்கள் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை. இது குறித்த முழுமையான ஆய்வறிக்கைகள் உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான தொற்று பாதிப்பு மற்றும் இறப்புகளில் வேறுபாடுகள் இருக்கலாம். அதன் பின்னணியில் உள்ள காரணிகளைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். உலக சுகாதார அமைப்பின் 194 உறுப்பு நாடுகளில், 38 விழுக்காடு நாடுகள் மட்டுமே உண்மையில் வயது மற்றும் பாலினத் தரவுகளைப் பதிவு செய்துள்ளன" என வலியுறுத்தினார்.