தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தார் மற்றும் அதன் முன்னாள் ஆசிரியர் குணசேகரன் இணைந்து யூ-ட்யூபர் மாரிதாஸ் என்பவருக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை ஜூலை 29ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தலைமையிலான அமர்வுக்கு முன்பாக இன்று (ஆகஸ்ட் 12) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தனியார் தொலைக்காட்சி சார்பாக ஆஜரான வழக்குரைஞர், " உண்மைக்கு புறம்பாக பொய்யான செய்திகளை, அவதூறுகளை பரப்பும் விதமாக மாரிதாஸ் பதிவிட்ட காணொலிகள் இன்னும் பல முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் உள்ளது. அவற்றை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும். குறித்த தனியார் தொலைக்காட்சி தொடர்பாக செய்தி வெளியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும். மேலும், அவதூறு செய்திகள் வெளியிட்ட மாரிதாஸ் உடனடியாக ரூ.1.5 கோடி நஷ்டஈடு தர வேண்டும்" என கோரினார்.
அப்போது மாரிதாஸ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்," மாரிதாஸால் வெளியிட்ட காணொலிகள் பலவும், நீக்க முடிந்த வலை தளங்களில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டுவிட்டது" எனத் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, "இனி, மாரிதாஸ் தனியார் தொலைக்காட்சி குறித்து காணொலி வெளியிட வேண்டுமென்றால், 48 மணி நேரத்திற்கு முன்பாக அந்நிறுவனத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும், அந்நிறுவனம் தரும் விளக்கத்தோடு தான், அதனை வெளியிட வேண்டும்" என உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் மீதான விசாரணை மீண்டும் ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று நடைபெறும் என்று கூறி வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.
அவதூறு பரப்பும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட போலி மின்னஞ்சல் கணக்கின் மூலம் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தது தொடர்பாக சென்னை சைபர் கிரைம் காவல் துறையினரிடம், அந்த தனியார் தொலைக்காட்சிப் புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.