சென்னை : தர்மபுரி மாவட்டத்தில் காப்பர் உள்ளிட்ட கனிம வளங்களை எடுக்கும் டெண்டரை இறுதி செய்ய தமிழ்நாடு அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் காப்பர் உள்ளிட்ட கனிம வளங்களை எடுக்கும் டெண்டருக்கு தடை விதிக்கக் கோரி, தர்மபுரி தொகுதியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தாமரைச்செல்வன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், "தர்மபுரி மாவட்டத்தில் காப்பர், இரும்பு, கருப்பு கிரானைட் உள்ளிட்ட கனிமங்களும், தாதுக்களும் அதிகமாக இருப்புக் கொண்டுள்ளன.
இந்நிலையில், அம்மாவட்டத்தின் பென்னாகரம், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய பகுதிகளில் அரசுக்கு சொந்தமான நிலங்களில் கருப்பு கிரானைட் எடுப்பதற்கான டெண்டர் அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் கடந்த ஜூன் 3 தேதி வெளியிட்டார். அதில் டெண்டர் எடுப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 28 ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கருப்பு கிரானைட் எடுப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தடையில்லா சான்று (Non Objection Certificate) பெற வேண்டும். அதன் பின்னர் தான் மாநில அரசு டெண்டர் அறிவிப்பை வெளியிட வேண்டும் என விதிகள் உள்ளது. இந்த விதிகள் எதையும் பின்பற்றாமல் தமிழ்நாடு அரசு டெண்டர் விட உத்தரவிட்டுள்ளது. எனவே வெளியிட்டுள்ள டெண்டருக்கு நீதிமன்றம் தடை விதித்து, புதிய ஏல அறிவிப்பை விதிகளை பின்பற்றி வெளியிட உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த மனுவானது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக இன்று(செப்.30) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் விடுதலை," வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல் இந்த டெண்டர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்" என வாதிட்டார்.
அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் விஜயநாராயண், "முறையான விதிகளுக்கு உட்பட்டு தான் டெண்டர் அறிவிக்கப்பட்டது. டெண்டரை எடுப்பவர்கள் சுற்றுச்சூழல் உள்ளிட்ட ஆறு அனுமதிகளைப் பெற வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இதில் எந்தவொரு விதிமுறை மீறலும் நிகழவில்லை" என குறிப்பிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இதுகுறித்து விரிவாக விசாரிக்கப்படும்வரை டெண்டரை இறுதி செய்யக்கூடாது என்று கூறி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு விசாரணை அக்டோபர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.