இது தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"பழம்பெரும் பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் வரும் ஆறு கல்லூரிகளில் தகுதியில்லாதவர்கள் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனை தருகிறது.
உதவிப் பேராசிரியர், நூலகர், உடற்கல்வி இயக்குநர்கள் போன்ற 234 பேர் நியமனத்தில் 152 பேர் தகுதியற்றவர்கள் என்பது – நடைபெற்றுள்ள நியமனங்களில் தலைவிரித்தாடியுள்ள முறைகேட்டினை வெளிப்படுத்தியிருக்கிறது.
சிறந்த கல்வி நிறுவனம் ஒன்று இத்தகைய முறைகேடுகளால் மட்டுமின்றி - பிரின்சிபால் நியமனத்திலும் குளறுபடிகள் ஏற்பட்டு - அனைத்து விஷயங்களுமே உயர்நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டிற்குள் நிகழ்ந்துள்ள இந்த நியமனங்களில் தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள், தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள், பல்கலைக்கழக மானியக்குழு வரையறுத்துள்ள தகுதி இல்லாதவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆகவே, பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தில் நடைபெற்றுள்ள இந்த நியமனங்கள் குறித்து தனியாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் “ரேட் பேசி தகுதிகள் விற்கப்பட்டதா” என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை நடத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.