கடலூரில் கடந்த மார்ச் இரண்டாவது வாரத்தில் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு மே, ஜூன் மாதங்களில் கடுமையாக அதிகரித்தது. ஜூன் இறுதி வாரத்தில் இருந்து அதன் தாக்கம் குறைய தொடங்கி தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதே நேரம் குணமடைந்து வீட்டிற்கு திரும்பும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் (ஆகஸ்ட் 24) கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு புதிதாக 370 பேருக்கு உறுதி செய்யப்பட்டும், பாதிப்பிலிருந்து 218
பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியும் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்ததாக அறிய முடிகிறது.
நாளொன்றுக்கு சராசரியாக 3 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரம் பேர் வரை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதன் காரணமாக தற்போது தொற்று பரவும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கடலூர் நகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் மிகத் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.
கடலூரில் இதுவரை 9 ஆயிரத்து 142 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில், 6 ஆயிரத்து 94 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 2 ஆயிரத்து 704 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 99 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.