உலகத்தில் பல்வேறு நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள், கரோனா தொற்று ஊரடங்கினால் தாயகம் திரும்ப முடியாமல் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.
இதையடுத்து மே மாதம் 7ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு 'வந்தே பாரத்' என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனயத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, துபாய், ஜப்பான், கொரியா, மியான்மார், மஸ்கட், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 15 நாடுகளில் இருந்து 23 ஆயிரத்து 675 பேர் வந்தனர்.
இவர்கள் விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். கரோனா தொற்று இல்லாமல் 14 நாள் தங்கியிருந்தவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தனிமைப்படுத்தல் காலம் முடியாதவர்கள் முகாமங்களில் தங்க வைக்கப்பட்டனர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 432 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதில் 236 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில், முகாமில் தங்கியிருந்தவர்களில் மீண்டும் செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ஓமன் நாட்டில் இருந்து வந்த நான்கு பேருக்கும் குவைத், சவுதி அரேபியாவில் இருந்து வந்த தலா மூன்று பேருக்கும் என பத்து பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, இவர்களுக்கு தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 442 ஆக உயர்ந்தது.
அதேபோல், சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்திற்கு பல்வேறு நகரங்களில் இருந்து வந்த 1125 விமானங்களில் 67 ஆயிரத்து 903 பேர் வந்துள்ளனர்.
இவர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். உள்நாட்டு முனையத்தில் வந்தவர்களில் மேலும் மூன்று பேருக்கு தொற்று ஏற்பட்டு 149 பேராக உயர்ந்தது. இவர்களுக்கும் கரோனா தொற்று சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரேடியோ வெடிகுண்டு விவகாரம்- சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுமி!