கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு நுழைந்த மர்ம கும்பல் அங்கிருந்த காவலாளியைக் கொலை செய்துவிட்டு, கொள்ளையில் ஈடுபட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், நடத்திய விசாரணையின் அடிப்படையில் சயான், மனோஜ் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிடக் கோரி இந்த வழக்கில் காவல்துறை தரப்பு சாட்சியாக உள்ள சாந்தா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், "தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் வழக்கு விசாரணையை துரிதமாக நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், நீலகிரி மாவட்ட நீதிமன்றம் மூன்று மாத காலத்திற்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.