உலகளாவிய பெருந்தொற்று நோயான கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் தமிழ்நாடு அரசு தளர்வளித்துள்ளது. நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வை அடுத்து ஐந்து மாதங்களுக்கு பிறகு சென்னையில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், வாகன ஓட்டுநர்களுக்கு கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்ற சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் வாகன ஓட்டிகள் முகக் கவசம், தலைகவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு எற்படுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பொதுமக்கள் அனைவரும் கைகளை சுத்தமாகக் கழுவி, கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும். காவல் துறை சார்பாக கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மெரினா கடற்கரையை திறப்பது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும். கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை நடைபெற உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து மாற்றம் குறித்து இரண்டு நாள்களில் திட்டமிட்டப்படி அறிவிக்கப்படும்" என்றார்.