உலகளாவிய பெருந்தொற்றான கரோனாவின் பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. இந்தியளவில் கரோனா வைரஸ் பாதிப்பில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் அதன் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் மிகத் தீவிரமடைந்து வருகிறது. கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரோனாவின் தாக்கம் கடந்த சில நாள்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக நீதிமன்றம், காவல் காண்காணிப்பாளர் அலுவலகம், அரசு வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 1) ஒரே நாளில் 238 பேருக்கு கரோனா தொற்றுநோய் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 59ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்துவந்ததை அடுத்து, அவர்களது சளி, ரத்த மாதிரிகள் தேனி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டதில், அவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அனைவரும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்கள் அனைவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத் துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். கோவையில் கரோனா தொற்றின் காரணமாக தற்போது ஆயிரத்து 750 பேர் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதே போல, 3 ஆயிரத்து 245 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரேநாளில் 216 வீடு திரும்பி உள்ளனர்.
நாளுக்குள் நாள் குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துவந்தாலும், மறுபக்கம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கூடுவதால் மாவட்ட நிர்வாகம் கடும் சவாலை சந்தித்துவருகிறது. இன்று ஒரே நாளில் பொள்ளாச்சி உள்ளிட்ட கோவையின் முக்கிய பகுதிகளைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.