சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 200 வார்டுகளில் ஏற்கனவே 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டுவருகின்றன. இத்திட்டத்தை விரிவுப்படுத்த நடமாடும் அம்மா உணவக வாகனங்கள் தொடங்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்திருந்தது.
அத்திட்டத்தின் முதல்கட்டமாக, இன்று 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான மூன்று நடமாடும் அம்மா உணவக வாகனங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்நிகழ்வில் நடமாடும் அம்மா உணவக வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 200 வார்டுகளில் இயங்கிவரும் 407 அம்மா உணவகங்களோடு வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என மூன்று மண்டலங்களில் நடமாடும் அம்மா உணவகங்கள் இயங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அம்மா உணவகத்தை விரிவுப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மக்களுக்கு அர்ப்பணிக்கும் விதமாக உணவுகளை வழங்கி தொடங்கிவைத்தார்.
முதற்கட்டமாக இந்த மூன்று நடமாடும் அம்மா உணவக வாகனங்கள் தொடங்கிவைக்கப்பட்டாலும், நாளடைவில் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து மண்டலங்களிலும் நடமாடும் அம்மா உணவகங்களைச் செயல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
தொழில் நிறுவனங்கள், கட்டுமான பணியிடங்கள், பேருந்து நிலையம் எனப் பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில் இந்த நடமாடும் வாகனங்கள் செயல்பட உள்ளன. நடமாடும் அம்மா உணவக வாகனத்தில் குடிநீர், கைக்கழுவும் வசதி உள்ளிட்டவையும் செய்யப்பட்டுள்ளது.
அம்மா உணவகத்தில் வழங்கப்பட்டுவரும் உணவு வகைகள் இந்த நடமாடும் அம்மா உணவகத்தில் கிடைக்கும். அதேபோல், விலைப்பட்டியலிலும் எந்த மாற்றமும் இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வின்போது, தமிழ்நாடு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் பா. வளர்மதி, தலைமைச் செயலர் சண்முகம், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.