மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடந்த மார்ச் 22ஆம் தேதி அனுமதி வழங்கினார். இதனையடுத்து, ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடைமையாக மாற்றுவதாக தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்திருந்தது.
அரசுடைமையாக மாற்றினாலும், வருமான வரி பாக்கி, சட்டப்பூர்வ வாரிசுதாரர்களான ஜெ. தீபா, ஜெ. தீபக் ஆகியோர் சென்னை நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கு காரணமாக, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்த முடியாத சூழல் நீடித்து வந்தது.
இதனிடையே, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் இல்லத்தை நினைவிடமாக மாற்றும் நடவடிக்கைக்கு ஏதுவாக தீபா,தீபக் ஆகியோருக்கு சேர வேண்டிய இழப்பீடு, வருமான வரித்துறைக்குச் செலுத்த வேண்டிய வரி ஆகியவை சேர்த்து, 67.9 கோடி ரூபாயை சென்னை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வைப்புத் தொகையாகச் செலுத்தப்பட்டது.
இந்நிலையில், வேதா நிலையம் இல்லத்தைக் கையகப்படுத்தியதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், அவரது சட்டப்பூர்வ வாரிசாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ஜெ. தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், "தமிழ்நாடு அரசு செலுத்திய வருமான வரி பாக்கி 36 கோடி ரூபாயை இழப்பீடாகப் பெற வருமானவரித் துறைக்கு தடை விதிக்க வேண்டும். போயஸ் கார்டன் வேதா நிலையம் இல்லத்திலிருந்து அசையா சொத்துக்களை எடுக்க தடை விதிக்க வேண்டும்" கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரோனா பேரழிவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் மக்கள் அவதியுற்றுவரும் சூழலில், வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு இழப்பீடாக 68 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு செலுத்தியதை அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்துவருவது கவனிக்கத்தக்கது.